அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.

Published Date: September 13, 2024

CATEGORY: CONSTITUENCY

மதுரை மடீசியா அரங்கில் கல்லூரி மாணவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சிகள் - அமைச்சர் துவக்கி வைத்தார்

தகவல் தொழில்நுட்ப துறையில் மாறிவரும் தேவைகளுக்கேற்ப, வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களில் இளைஞர்கள் அதிக வேலை வாய்ப்புகளை பெற சென்னையில் சேர்ந்த நாஸ்காம் பவுண்டேசன் மற்றும் ஸ்கில்ஸ்டா நிறுவனங்கள், மதுரையில் உள்ள தமிழ்நாடு தொழில் முனைவு மேம்பாட்டு மையத்துடன் இணைந்து விரிவான ஏற்பாடுகள் செய்து வருகின்றன.

இதன்படி ஆண்டுதோறும் பொறியியலில் பட்டயப் படிப்பு முடித்த 1000 மாணவர்களுக்கு, ஒரு மாத இலவச உறைவிட பயிற்சி கொடுத்து வாகன உற்பத்தி நிறுவனங்களில் பணியில் அமர்த்துகிறது. இதன்படி கடந்த நான்கு ஆண்டுகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக தற்போது, இணைய மற்றும் தரவுகள் பாதுகாப்பு அதிகாரி, வணிக செயல்முறை மேலாண்மை, வங்கி நிதி சேவைகள் மற்றும் காப்பீடு பயிற்சிகளை 250 பேருக்கு இலவசமாக வழங்குகின்றன. இதில் பொறியியல் மற்றும் இளங்கலை பட்டப்படிப்புகளில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி அறிவியல் எம்.காம், எம்.சி.ஏ, எம்.பி.ஏ, பி.பி.ஏ, பி.காம் படித்தவர்களும் சேரலாம். மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள தமிழ்நாடு தொழில் முனைவு மேம்பாட்டு மையத்தில் இரண்டு மாதம் இலவசமாக வழங்கப்படும் இப்பயிற்சியால் நல்ல வேலை வாய்ப்புகளை பெறலாம்.

இதன் தொடக்க விழா மதுரை மடீட்சியா அரங்கில் நேற்று நடந்தது. இதனை தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தார். இதில் ஸ்கில்ஸ்டா நிறுவனர் ரமேஷ்,  நாஸ்காம்பவுண்டேசன் முதுநிலை மேலாளர் கீதா, எச்.சி.எல். நிறுவன இயக்குனர் திருமுருகன் சுப்புராஜ், தமிழ்நாடு தொழில் முனைவு மேம்பாட்டு மைய இயக்குனர் ஜெயராமன், மடீட்சியா தலைவர் லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பவியல் துறையில் உள்ள புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

Media: Dinakaran